மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்தில் காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வேலை தேடி சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மஸ்கெலியா காவல்நிலைய அதிகாரி ஒருவர்,
மஸ்கெலியா கவரவில வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய மூன்று மாணவர்கள் வீடுகளை விட்டு காணாமல் போயுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக தெரிவித்தார்.
அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மஸ்கெலியா காவல்துறையினர் மாணவர்களை கண்டுபிடிக்க தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் மட்டக்களப்பு பிரதேசத்தில் காணப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த மூன்று மாணவர்களும் கடந்த 27ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வேலை தேடிச் சென்ற போது மாணவர்களை விசாரித்து மட்டக்களப்பு காவல்துறையிடம் ஒப்படைத்ததன் பின்னர் மஸ்கெலியா காவல்துறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, மூன்று மாணவர்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.