காணி பறிப்பு அம்பலம் – பதவி துறப்பாரா ஜீவன்’? – வேலுகுமார் பகிரங்க சவால்!

0
163

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள காணிகள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன என நாம் தகவல் வெளியிட்டபோது, அதனை மறுத்து ‘வெள்ளையடிப்பு’ செய்யும் நடவடிக்கையில் தோட்ட உட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும், அவரின் சகாக்களும் ஈடுபட்டனர்.ஆனால் தோட்டப்பகுதிகளிலுள்ள காணிகளை வழங்க அமைச்சரவையே அனுமதி வழங்கிவிட்டது. எனவே, இதன் பின்னணியில் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரின் சகாக்கள் இல்லையெனில் இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பியால் இன்று (07.09.2021) விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் (JEDB) நிர்வாகத்தின்கீழுள்ள பெருந்தோட்டப்பகுதி காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் கடந்தகாலங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இது தொடர்பான தகவல்களை நாம் அம்பலப்படுத்தினோம். தோட்டக் காணிகளை இவ்வாறு வெளியாருக்கு வழங்குவதற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரும், அவரால் நியமிக்கப்பட்டுள்ள சில சகாக்களும் துணை நிற்பதாகவும் சுட்டிக்காட்டினோம்.

எனினும், இந்த விடயத்தை மூடிமறைத்து, மக்களை திசைதிருப்புவதற்காக எம்மீது விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. அறிக்கைகள்மூலம் சேறுபூசும் அரசியலும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் மக்களுக்காக மக்கள் அரசியலை முன்னெடுக்கும் நாம் ஓயவில்லை. உண்மை நிலைவரத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்தினோம். நாம் சொன்னது உண்மைதான் என்பது இன்று உறுதியாகியுள்ளது. இதனால் தரகுவேலை பார்த்தவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

பால் உற்பத்திக்காக தனியார் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு, விவசாய உற்பத்தி மேம்பாடு என்ற போர்வையிலேயே, பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதன் ஆரம்பக்கட்ட நகர்வாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கலபொடவத்த பெருந்தோட்டம் மற்றும் மவுன்ட் ஜின் தோட்டங்களில் 811 ஏக்கரும், தெல்தொட்ட பெருந்தோட்டம் மற்றும் க்றேவ் வெலி தோட்டங்களில் 350 ஏக்கரும் வழங்கப்படவுள்ளன. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது.

எனவே, இனி என்ன சொல்லி தரகுவேலை பார்த்தவர்கள் சமாளிக்க போகின்றார்கள்? தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை எமது மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சியின்போது நாம் மேற்கொண்டிருந்தோம். அதுமட்டுமல்ல தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு தோட்ட காணிகளை தலா 2 ஏக்கர் வீதம் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க பாடுபட்டோம். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? 10 பேர்ச்சஸ் என படம்காட்டிக்கொண்டு, எமது மக்களுக்கு சேர வேண்டிய காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும், அவரின் சகாக்களும் கூறுவார்களாயின், தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். முடியாவிட்டால் அரசியிலிருந்து வெளியேற வேண்டும். அதனைவிடுத்து எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசில் இருந்து வெளியேறாமலும் இருந்தால் துரோகத்துக்கு துணை போனமை உண்மைதான் என்பது மேலும் உறுதியாகும்.” -என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here