காலி கிளாடியேட்டர்ஸ் 2வது வெற்றி Points table லில் முதலிடம்.

0
205

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, கண்டி வோரியர்ஸை நான்கு விக்கெட்டுகளினால் வீழ்த்தியுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்றிரவு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் அஞ்சலோ பெரேரா தலைமையிலான கண்டி வோரியர்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி வோரிஸர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கி, முதல் விக்கெட்டினை எதுவித ஓட்டங்களும் இன்றி இரண்டாவது பந்து வீச்சுக்கே பறிகொடுத்தது.

அதன்படி கெனார் லூயிஸ் டக்கவுட்டுடன் சமித் படேலின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சரித் அசலங்கவும் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனால் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 16 ஒட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக கமிந்து மெண்டிஸ் – அஹமட் ஷெஹ்சாத் ஆகியோர் ஜோடி சேர்ந்து கண்டி அணியை மீட்டெடுத்தனர்.

அந்த தொடர்பின் காரணமாக 13 ஆவது ஓவரில் வெற்றிகரமான ஓட்ட விகிதத்தை தக்கவைத்த கண்டி வோரியர்ஸ் அணி கமிந்துவின் ஆட்டமிழப்பினால் நடு வரிசையில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது.

அணி 99 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தனஞ்சய லக்ஷானின் பந்து வீச்சில் பென் டன்கிடம் பிடிகொடுத்து கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரின் ஆட்டமிழப்பினை அடுத்து வந்த அஞ்சலோ பெரேரா (10), ரோவ்மன் பவல் (01), ஆகியோர் குறைந்த ஓட்டங்களை பெற்று வெளியேற, ஆரம்ப வீரராக களமிறங்கிய அஹமட் ஷெசாத் 51 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

எனினும் ஏழாவது விக்கெட்டுக்காக டி.எம்.சம்பத் மற்றும் இஷான் ஜெயரத்ன ஆகியோர் ஜோடி சேர்ந்த நுவான் துஷாரவின் இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதனால் கண்டி வோரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 144 என்ற இலக்கினை குவித்தது.

143 என்ற இலக்கை துரத்திய காலி கிளாடியேட்டர்ஸுக்கு தனுஷ்க குணதிலக்க – குசல் மெண்டிஸ் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி இவர்கள் முதலாவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடன் தனுஷ்க குணதிலக்க 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த மொஹமட் ஹபீஸ் (13), பென் டன்க் (3), பானுக ராஜபக்ஷ (22) மற்றும் சுமித் படேல் (4) ஆகியோரின் விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது.

எனினும் லஹிரு மதுசங்க மற்றும் தனஞ்சய லக்ஷானின் 7 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தினால் நான்கு பந்துகள் (19.2) மீதமிருந்த நிலையில் வெற்றியிலக்கை கடந்தது காலி கிளாடியேட்டர்ஸ்.

லஹிரு மதுசங்க 13 பந்துகளில் 22 ஓட்டங்களுடனும், தனஞ்சய லக்ஷான் 4 பந்துகளில் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக 2 விக்கெட்டுகள் மற்றும் 10 ஓட்டங்களை பெற்ற தனஞ்சய லக்ஷான் தெரிவானார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here