கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் அதில் பயணித்த 100 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போயிங் 737 விமானம், உள்ளூர் நேரப்படி 12:08 மணியளவில், கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொல்கூன் நகரத்திற்கு கிளம்பியது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆறு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்துள்ளனர். பயணிகள் பெரும்பாலோனோர் கியூபா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அரசு வலைதளமான கியூபாடிபேட் கூறியுள்ளது.
இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.