அந்நாட்டின் சுற்றுலாத் துறையும் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளது
கிரீஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தற்போது 45 டிகிரி சென்டிகிரேட்டாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட காற்று காரணமாக கிரீஸ் முழுவதிலும் காட்டுத் தீ பரவி பொது மக்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரீஸ் நாட்டில் பெரும்பாலான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள ரோட்ஸ் தீவில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அங்கு காணப்பட்ட வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட சுமார் 30,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு விடுமுறையைக் கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது தற்காலிக தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்காக 20க்கும் மேற்பட்ட கிரீஸ் கடற்படை மற்றும் தனியார் படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
காட்டுத் தீயை அணைப்பதற்காக ஒரு விமானம் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 40 தீயணைப்பு வாகனங்களுடன் 200 தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவி வரும் இவ்வாறான காலநிலை மாற்றங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் அந்நாட்டின் சுற்றுலாத் துறையும் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.