கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை முழுமையாக செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

0
16

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் ஆகியோருடன் அமைச்சின் பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இக்கள விஜயத்தின் பின்னராக மாவட்டச்செயலக திறன்விருத்தி மண்டபத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனாக முழுமையாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அமைச்சர் வசந்த சமரசிங்க இதன்போது கருத்து வெளியிடுகையில், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மீள செயற்படுத்தும் அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் ஒரு நிறுவனமாக்குவதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைவரிடமும் கருத்துகள் கேட்டறியப்பட்டன.அந்தவகையில் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். தமக்குரிய வசதிகளை ஒழுங்குபடுத்தித் தருமாறும் கோரியிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம்,மற்றும் துறைசார் அதிகாரிகள்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள்,

கரைச்சி பிரதேசபை தவிசாளர்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் தலைவர் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம்,கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலைய மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,பொருளாதார மத்திய நிலைய கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here