ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் ஆசிரியை ஒருவரால் தடியால் தாக்கப்பட்ட நிலையில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கெர்க்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாடசாலையில் 4ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். நேற்று திங்கட்கிழமை (06) ஆங்கில பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, அருகிலுள்ள மாணவன் தாக்கப்பட்ட மாணவனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த மாணவன் தாக்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 9 வயது சிறுவனுக்கு வலது கை மற்றும் உடம்பின் பின் பகுதியிலும் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் சிறுவனின் உடம்பின் பின் புறத்தில் காணப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு, மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர், ஹட்டன் வலய கல்வி பணிமனை ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சிறுவன் தாக்கப்பட்டமைக்கு சிறுவனை தாக்கிய ஆசிரியையும் பாடசாலையின் அதிபரும் பொறுப்பு கூறவேண்டுமென பெற்றோர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியையை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.