கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் பணிகள் தற்போது நிறைவுபெற்று வருவதாகவும் இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மற்றும் தனிப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் விடுப்பட்ட 20 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் நேற்றும் இன்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்திலும்.
சைனோபார்ம் முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவின் பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகள் தலவாக்கலை பகுதியில் தலவாக்கலை லிந்துலை நகர பகுதி கூம்வூட், கிரேட்வெஸ்டன், ஹொலிரூட், வட்டகொட உள்ளிட்ட கிராம சேவகர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், கொட்டகலை பகுதியில் கொட்டகலை நகரம், டிரேட்டன், யுலிபீல்ட்,மேபீல்ட் குடுஓயா ரொசிட்டா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் கொட்டகலை தேசிய பாடசாலையில் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே வேளை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும். கடந்த வாரம் 72 பேருக்கு ரப்பிட் என்டிஜன் பரிசோதனை செய்ததில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்படவில்லை என்றும் வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனைகளில் மாத்திரம் 03 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூகள் பெற்றுக்கொள்வதில் இளைஞர் ஆர்வம் காட்டுவது குறைவாக உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்