கொத்மலை பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு கொத்மலை பிரதேச சபை காரியாலயத்தில் 29.03.2018 அன்று மதியம் 2.30 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச சபையின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான சுசந்த ஜயசுந்தரவும், உப தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஹிந்த செனவீரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர், உப தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திறந்த முறை வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.
இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான சுசந்த ஜயசுந்தர மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மகேஸ் கல்ஏதண்ட அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் 30 வாக்குகளைப் பெற்று சுசந்த ஜயசுந்தர அவர்கள் தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட மகேஸ் கல்ஏதண்ட அவர்களுக்கு 20 வாக்குகளே பெறமுடிந்தது.
இதேவேளை உபதலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஹிந்த செனவீர அவர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரத்னம் சிவகுமார் அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் மஹிந்த செனவீர 30 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கி கொண்டார். இதற்கு எதிராக போட்டியிட்ட ரத்னம் சிவகுமார் 20 வாக்குகளே பெறமுடிந்தது.
53 உறுப்பினர்களைக் கொண்ட கொத்மலை பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இருவர் வாக்களிக்கவில்லை என்பததோடு, மஹஜன எக்சத் பெரமுன சார்பாக இருவரில் ஒருவர் வாக்களிக்கவில்லை என்பதோடு, ஒருவர் தலைவர் தேர்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், உப தலைவர் தேர்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் வாக்களித்தார் என்பதும் குறிப்பித்தக்கது.
கொத்மலை பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 20 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 13 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 16 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 02 ஆசனமும், மஹஜன எக்சத் பெரமுன கட்சிக்கு 02 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.
(க.கிஷாந்தன்)