கொரோனா தொற்றிலிருந்து தோட்டத்தொழிலாளர்களை பாதுகாக்க தோட்டங்களில் கூட்டுறவு கடைகள் ஆரம்பிப்பு.

0
157

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தோட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதன் காரணமாக பொது மக்கள் உட்பட தோட்ட நிர்வாகங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த கொரோனா தொற்று பரவல் தொழிலாளர்கள் சனநெருக்கமான இடங்களுக்கும் நகரங்களுக்கும் செல்வதனாலேயே தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

எனவே இந்த நிலையினை தவிர்த்து கொள்வதற்காக ஹட்டன் பிளான்டேசன் தோட்டத்தொழிலாளர் வீடமைப்பு சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி அதனூடாக லிப்பகெலே, மற்றும் ஊவாகெலே தோட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்தின் அனுமதியுடன் இன்று (03) இரண்டு கூட்டுறவு கடைகள் குறித்த தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டன.

ஹட்டன் பிளான்டேசன் பிராந்திய முகாமையாளர் தரங்க சேனாரத்ன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுறவு கடைகளில் தோட்டத்தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மா, பால், மிளகாய், தேங்காய் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். பணம் இல்லாதவர்களுக்கு கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுக்கப்பட்டு மாதாந்த சம்பளத்தில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் தோட்டத்தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது எனவும் இதன்மூலம் தோட்டத்தொழிலாளர்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக கூலி வாகனங்களுக்கு செலவிடும் பணம் மற்றும் இதர செலவுகள் மிஞ்சுவதாகவும் அத்தோடு கொரோனா தொற்று உள்ளிட்ட ஏனைய தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு இது உறுதுணையாக அமையும் எனவும் தெரிவித்தார்.

ஊவாக்கலை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுமார் 4620 பேரும், லிப்பகலை தோட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 2200 பேரும் நன்மையடையவுள்ளனர். இந்நிகழ்வுக்கு ஊவாக்கலை , லிப்பகலை தோட்ட முகாமையாளர் சுஜீவ கொடகே, உதவி முகாமையாளர் பிரியந்த வைத்தியதிலக , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஏ.நல்லுசாமி உற்பட பலரும் கலந்து கொண்டனர

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here