கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

0
72

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் (Sanjay Roy) உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ நிறைவு செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.இந்தநிலையில், அவரின் உடல் ஒகஸ்ட் ஒன்பதாம் ஆம் திகதி கல்லூரியின் கருத்தரங்கு அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்திருந்தனர்.சம்பவத்துடன் தொடர்புடைய இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட போது மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) உட்பட ஏழு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, அவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை சனிக்கிழமை தொடங்கிய நிலையில் அன்றைய தினம் சந்தீப் கோஷ் உள்பட நான்கு பேரிடம் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.அத்தோடு, கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டது.

அவரிடம் சோதனை நிறைவு செய்யப்பட்ட போதிலும் அதை நீதிமன்ற விசாரணைக்கு ஆதாரமாக பயன்படுத்த முடியாதெனவும் எனினும் தொடா் விசாரணைக்கு அந்தச் சோதனையில் தெரியவரும் தகவல்கள் உதவுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்தோடு, பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டு தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சந்தீப் கோஷ் மற்றும் அந்த மருத்துவமனையின் முன்னாள் மருத்துவக் கண்காணிப்பாளரும் துணை முதல்வருமான சஞ்சய் வஷிஸ்த் (Sanjay Vashisht) உள்பட 15 பேருக்குத் தொடா்புள்ள இடங்களில் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டுள்ளது.சந்தீப் கோஷின் வீட்டுக்கு காலை ஆறு மணியளவில் சிபிஐ அதிகாரிகள் சென்ற நிலையில், வீட்டுக் கதவை திறக்காமல் அவா்களை சந்தீப் கோஷ் ஒன்றரை மணி நேரம் வெளியே காக்கவைத்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு, கடந்த சில நாள்களுக்கு முன்னா் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட மருத்துவமனையை ஏராளமானோா் சூறையாடினா்.இதையடுத்து, அந்த மருத்துவமனை அருகே ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடவும் மற்றும் கூட்டங்கள் நடத்தவும்ஒகஸ்ட் 24 ஆம் திகதி வரை தடை விதித்து மாநில காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தற்போது அந்தத் தடையை ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை காவல் துறை நீட்டித்துள்ளதுடன் கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here