குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர்.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நுவான் போபேகே தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் காணும் போது சாட்சிகள் நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சாட்சிகள் இல்லை என்றால் சந்தேக நபர்கள் இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாட்சிகளாக வரத் தயாராக இருக்கும் மற்றவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்றும் எவ்வாறாயினும் இந்தத் தடையை நீக்கக் கோரி இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் பேசிய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஜீவந்த பீரிஸ் மற்றும் தம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் அடக்குமுறையை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
‘கடந்த 46 நாட்களாக நாங்கள் கோட்டாபய-ரணில் அரசாங்கத்தை தோற்கடித்து புதிய ஆட்சி யுகத்தை ஏற்படுத்துவதற்காக காலி முகத்திடல் மைதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.
ஆனால் மே 9 அன்று, அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கும்பல் இரக்கமின்றி எதிர்ப்பாளர்களைத் தாக்கியது. இதன் விளைவாக பொதுமக்கள் தெருக்களில் இறங்கி, இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்படுகிறார்கள். பல வழிகளில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 14 பேருக்கும் மேல் அவர்களது கடவுச்சீட்டை ஒப்படைப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறோம். கோட்டாபய-ரணில் அரசாங்கத்தை தோற்கடிக்கும் வரை இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம், கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் எந்த வகையிலும் எங்களுக்குள் பயத்தை ஏற்படுத்த முடியாது என்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் எங்கள் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கினோம். அன்று இருந்த நபர்களை தெளிவாகக் குறிப்பிட்டோம். எங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கும்பல்களின் வீடியோக்கள் மற்றும் படங்களை வைத்துள்ளனர். எனவே சந்தேகநபர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மேலும் மூளையாக செயல்பட்டவர்களுக்கு பயணத் தடை விதித்து அவர்களைக் கைது செய்யுமாறும் அவர்கள் தவறினால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.