சட்டரீதியான ஆவணங்களை வழங்கும் நடமாடும் சேவை – 16 ஆம் திகதி நுவரெலியாவில்.

0
215

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தேவையான சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையை 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேள்கொள்ளப்பட்டுள்ளன.

கௌரவ நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நடமாடும் சேவையில், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், சட்ட உதவிகள் ஆணைக்குழு, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் தேவையான சேவைகளை பொது மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

பதிவு செய்யப்படாத பிறப்புகளை பதிவு செய்தல், பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளல். திருத்தங்களை சமர்ப்பித்தல் மற்றும் காணாமற்போன தேசிய அடையாள அட்டைகளின் இரண்டாம் பிரதிகளை பெற்றுக்கொள்ளல். சட்ட உதவி சேவைகள், மத்தியஸ்த சபை மற்றும் கடன் சலுகை சபைகள் தொடர்பான தெளிவூட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பிரஜையும் இந்நடமாடும் சேவைக்கு வருகைதர முடியும். மேலும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட அவர்களின் ஆலோசனைக்கமைய நுவரெலியா மாவட்ட செயலகம் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here