தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பல சுற்று பேச்சுவார்ததைகளை நடத்தியுள்ளது. கடந்த ஒன்றறை வருடங்கள் காத்திருந்தும் எவ்விதமான சாதகமான சமிஞ்சைகளை பெருந்தோட்ட கம்பனிகள் தெரிவிக்காததால் தோட்டத் தொழிலாளர்கள் பொறுமையிழந்து நிற்கின்றனர். நிலைமை தொடருமானால் எதிர்வரும் நாட்களில் மிக கடினமானதும், தீர்க்கமானதுமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் அட்டன் பகுதி தோட்டங்களில் நடைபெற்ற தொழிலாளர் சந்திப்புக்களின் போது தெரிவித்தார்.
பல லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் தோட்டத் தொழில்துறையை நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் நிலவும் வாழ்கை செலவு அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. நாட்டில் தோட்ட தொழில்துறை நீங்கலாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், ஏனைய தனியார்துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் அரசாங்கமும் , பெருந்தோட்ட கம்பனிகளும் நடந்துகொள்கின்றன.
இலங்கையில் நட்டத்தில் இயங்கும் பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதை காரணங்காட்டி அங்கு தொழில்செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமலா இருக்கிறது? தோட்டத் தொழில் துறை மூலமாக இந்த நாடு பெருமளவிலான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்கிறது. ஆனால் நாட்டில் ஏனைய தொழிலாளர்களைவிட மிக குறைவான சம்பளத்தையே இவர்கள் பெற்றுவருகின்ற அதே நிலையில் நாட்டில் நிலவுகின்ற விலைவாசி உயர்வை இவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை அரசாங்கம் புறக்கணித்து செயற்படமுடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுவதால் அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கூடுதலான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கொருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகின்ற விதிமுறையை பெருந்தோட்ட கம்பனிகள் மீறி செயற்படுகின்றன. தொடர்ச்சியாக இழுத்தடிப்புக்களை செய்து வருகின்றன. இது தோட்டத் தொழில்துறையில் அமைதியின்மையை ஏற்படுத்தப்போவதை தவிர்க்க முடியாததாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரசை பொருத்தவரையில் பேச்சுவார்ததை மூலம் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதற்கான இறுதி சந்தர்ப்பத்தை பெருந்தோட்ட கம்பனிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.