சம்பளப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி முல்லோயா கோவிந்தன்….. கோவிந்தன் புரம் திறப்பு விழாவில் திலகர் எம்.பி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் நாடெங்கும் பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் முதலாவது சம்பளப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி முல்லோயா கோவிந்தன் நினைவாக புதிய கிராமம் ஒன்று அமைக்கப்பட்டு ஹேவாஹெட்ட முல்லோயா தோட்டத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுவதானது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்துக்கும் செய்த கௌரவமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழநி திகாம்பரத்தின் முன்னெடுப்பில், நுவரலியா மாவட்டம் , ஹங்குரங்கெத்தை பிரதேச சபைக்கு உட்பட்ட முல்லோயா தோட்டத்தில் 45 வீடுகளைக் கொண்ட புதிய கிராமம் ‘கோவிந்தன்புரம் கிராமம்’ நேற்று (21/10) திறந்து வைக்கப்பட்டது.
ஹங்குராங்கத்தை பிரதேச சபை உறுப்பினர் சதானந்தன்
தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வி.புத்திரசிகாமணி, பிராந்திய இயக்குனர் ஹசித்த முனவீர, பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், அமைப்பாளர் வேலுசாமி, முன்னாள் அமைப்பாளர் செந்தூரன், சண்முகராஜ் தம்ரோ தோட்ட நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஹங்குராங்கத்தை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகள் நுவரலியா மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவே உள்ளது. இங்கே வாக்கு வங்கி குறைவு என்பதால் பலரும் புறக்கணித்தே வந்துள்ளனர். 2009 மாகாணசபைத் தேர்தல்களுக்காக முன்பு நாங்கள் இங்கே வருகை தந்தபோது பல தடைகள் காணப்பட்டன. தோட்டங்களுக்குள் வருவதற்கும் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இப்போது எமது தொழிலாளர் தேசிய முன்னணியின் கொட்டகலை பிரதேச அமைப்பாளராக செயற்படும் செந்தூரனே அன்று துணிச்சலாக களமிறங்கி பல சவால்களை சந்தித்து எமது அமைப்பினை இங்கு மீளவும் உருவாக்கினார். அதற்காகவே இன்று அவர் இந்த பிரதேச மக்களால் கௌரவிக்கப்படுகிறார்.
முல்லோயா தோட்டத்தில் 45 வீடுகளை அமைக்க அமைச்சர் திகாம்பரம் தீர்மானித்து அதற்கு அடிக்கல் நாட்டிய விழாவில் நான் உரையாற்றியபோது, இது கோவிந்தன் புரம் என அமையும் என சொல்லியிருந்தேன். எமது இப்போதைய முல்லோயா மாவட்ட தலைவர் பெயர் கோவிந்தராஜ் என்றபடியால் அவரது பெயரில் கிராமம் அமைப்பதாக பலர் எம்மை விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு குடும்ப வரலாற்றை தவிர வேறொன்றும் அறியாதவர்கள் .
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் நாடெங்கும் இன்று பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் முதலாவது சம்பளப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி முல்லோயா கோவிந்தன் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக தமது நாளாந்த வேதனத்துக்காக போராடியே வந்துள்ளனர் என்பதற்கு முல்லோயா கோவிந்தனின் வீர மரணம் ஒரு சாட்சியாகிறது.
இன்று 1000/- சம்பள உயர்வுக்காக மக்கள் அணி திரண்டு போராடி வருகிறார்கள். 1940 ஆம் ஆண்டு நாட்சம்பளமாக 16 சதம் கோரி இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டத்தில் முல்லோயா தோட்ட மக்கள் ஆக்ரோஷமாக போராடினர். இதனால், பொலிஸ் படை கொண்டு போராட்டத்தை அடக்க முயன்றனர். இதன்போது நடந்த கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரமரணம் எய்தியவரே மலையகத்தில் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி முல்லோயா கோவிந்தன் ஆவார். இன்றும் சம்பளத்துக்காக போராட்டம் இடம்பெறும் வேளை அந்த தியாகியை நினைவு கூர்ந்து அவர் வீர மரணம் எய்திய முல்லோயா மண்ணில் மலையக புதிய கிராமம் அமைக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிஜ் நிருபர்