சம்பள விவகாரம்: அன்று ரணில் சொன்னதையே இன்று அநுரவும் கூறுகிறார்

0
4

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவும், இ.தொ.காவினரும் கூறிய விடயத்தைதான் ஜனாதிபதியும் தலவாக்கலைக்கு வந்து தற்போது கூறியுள்ளார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை தலவாக்கலையில் மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளோம்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றது. உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு தற்போது முழு வீச்சுடன் செயற்படுகின்றது.

ஜனாதிபதி தலவாக்கலைக்கு வருகை தந்திருந்தார். மலையக மக்களுக்கான 10 பேர்ச்சஸ் காணி உரிமை பற்றி எதுவும் பேசவில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் கம்பனிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். கடந்த மே தினத்தன்று ரணில் விக்கிரமசிங்கவும், இதொகாவினரும் தலவாக்கலையில் வைத்து விடுத்த அறிவிப்பைதான், ஜனாதிபதியும் தலவாக்கலைக்கு வந்து கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

மீண்டும், மீண்டும் பொய்யுரைப்பதால், பொய் உண்மையாகப் போவதில்லை. எனவே, கம்பனிகளுடன் பேச்சு நடத்துங்கள். இணக்கப்பாட்டை ஏற்படுத்திய பின்னர் மக்களுக்கு உறுதிமொழியை வழங்குங்கள்.

நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மே முதலாம் திகதி நாம் பெருமளவு மக்களை திரட்டி எமது பலத்தை காட்ட வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here