சலே வழக்கில் பேராயர் ரஞ்சித் ஆண்டகை இடையீட்டு மனு தாக்கல்!

0
14

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடை கருத்துரைப்பதற்கு அனுமதிகோரி, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரரான சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள இந்த வழக்கின் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்றிறனுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த வழக்கில் இடைபுகுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாக சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், அது குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் மூன்று தடவைகள் நாட்டின் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப் பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள இடைக்கால மனுதாரரான கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அதனைத் தடுப்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கத்தோலிக்கர்கள் மற்றும் தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் எனப் பெறப்பட்ட புலனாய்வு அறிக்கைகள் குறித்து கொழும்பு பேராயருக்கோ அல்லது கத்தோலிக்க குருமார்களுக்கோ எவ்வித அறிவித்தலும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்த ஆசாத் மெளலானா எனப்படும் நபர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் மனுதாரர் சுரேஷ் சலே தொடர்புபட்டுள்ள விதம் குறித்துத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அது குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்றும் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி வணக்கத்துக்குரிய ரொஹான் சில்வா அடிகளாரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், மனுதாரர் சுரேஷ் சலே கோரும் நிவாரணத்தை நீதிமன்றம் வழங்கினால், அதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர் சுரேஷ் சலேயின் மனுவில் இடைபுகுந்து கருத்துரைப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அவரது மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யுமாறும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here