கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2024 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அதற்கமைய பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், மார்ச் 10 ஆம் திகிக்கு முன்னர் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தின் மூலம் இணையவழியூடாக தெரியப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலை அதிபர்களும் மாணவர்களுக்கு அனுமதி அட்டைகளை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.இன்னும் அனுமதி அட்டைகள் கிடைக்காத மாணவர்கள் தங்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சை திணைக்களத்தை நாடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சி பட்டறைகள் உள்ளிட்டவை 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்தத் தடை அன்று முதல் பரீட்சைகள் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.