தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி நடிகரான முரளியின் மகன் அதர்வா, தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய நடிகராக திகழ்கிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதர்வாவிடம், ‘படங்களின் தோல்வி உங்களை பாதித்து இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில், “சில சமயம் நான் தேர்வு செய்த படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாமல் போயிருக்கலாம். படங்கள் நடிக்கும்போது. 100 சதவீதம் உழைப்பை கொட்டி அர்ப்பணிப்புடன் தான் நடிக்கிறோம். ஆனால் எல்லாமே நம் கையில் இல்லை. எனவே சினிமாவில் எதையும் கணிக்க முடி யாது. அதற்காக தோல்விகளால் துவண்டு போக மாட்டேன்” என்றார்.
‘நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த நடிகை யார்?’என்ற கேள்விக்கு, “என்னுடன் நடித்த, நடிக்கும் கதாநாயகிகள் அத்தனை பேரையும் எனக்கு பிடிக்கும். யாருக்கும் குறை வைக்கவே மாட்டேன். அதேபோல அனைவருமே நண்பர்கள் தான். நண்பர்களை விட எனக்கு நலம் விரும்பிகள் அதிகம்” என்று உஷாராக பதிலளித்தார்.




