சிறார்களை வேலைக்கு அழைத்துசெல்வது ஆட்கடத்தலுக்கு ஒப்பான செயலாகும் – எம்.பி. திகாம்பரம் தெரிவிப்பு

0
130

அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு மலையகத்திலிருந்து சிறார்களை வீட்டுவேலைக்கு அழைத்துச்செல்லும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியுள்ளது – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் இன்று (21.07.2021) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலைசெய்த சிறுமி தீ மூட்டிக்கொண்டாரா, அல்லது தீ வைத்து கொளுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் கண்டறியப்படவேண்டும். இச்சம்பவம் தொடர்பில் அடி முதல் முடிவரை அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். அதன் பின்னணியில் செயற்பட்ட அனைவருக்கும் தக்க தண்டனை வழங்கப்படவேண்டும். இதற்கான நீதி விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே, நீதி விசாரணை உரிய வகையில் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்.

அனைவருக்கும் கஷ்டம் உள்ளது. அதற்காக சிறார்களை வேலைக்கு அனுப்புவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் வேறு பகுதிகளில் அவ்வாறு நடைபெறுவதில்லை. மலையகத்தில் இருந்துதான் சிறார்கள் இவ்வாறு வீட்டு வேலைக்கு செல்கின்றனர். இதன் பின்னணியில் செயற்படும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். சிறார்களை வேலைக்கு அழைத்து செல்வது ஆட்கடத்தலுக்கு ஒப்பான செயலாகும்.” – என்றார் திகாம்பரம்.

 

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here