சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மற்றும் காணாமல் ஆக்கப்படுவதை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
123

இலங்கையில் சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மற்றும் காணாமல் ஆக்கப்படுவதை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம் வலியுறுத்தியுள்ளார்.

அட்டனில் இன்று (31.05.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு சிறுவர் சிறுமியரை பாதுகாக்க வேண்டும் எனவும் அனைத்து விடயங்களிலும் நலிவடைந்துள்ள அரசாங்கம், நாட்டின் எதிர்காலமாகிய சிறுவர் சிறுமியர்களை பாதுகாக்க முடியாத நிலைமையில் அரசாங்கம் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.

கயவர்களின் கைகளில் அகப்பட்டு சிறுவர், சிறுமிகள் சின்னாபின்னமாவதை கண்டு மௌனிகளாக அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா, ஆயிஷா உள்ளிட்ட பல மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இதனை ஒரு பாரதூரமான ஒன்றாக கருத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ் நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ள பொருட்கள் இலங்கை தேசத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவையின் அடிப்படையில் வறிய மக்களுக்கு இன மத பேதமின்றி அந்த உதவிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மனிதாபிமான உதவிகளை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் அரசியல் ஆதாயம் கருதி செயற்படுவது வேதனையான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியோ, தமிழ் முற்போக்கு கூட்டணியோ இந்த மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கையை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படுவதை போன்று அரசாங்க அதிபர் மற்றும் உதவி இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் ஊடாக மலையப் பகுதிகளிலும் இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் நாட்டு மக்கள் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் கச்சதீவு மீட்பு கோரிக்கையையும் இணைத்து கருத்து வெளியிடுவது மனிதாபிமான அற்ற ஒன்றனெ தெரிவித்தார்.

கச்சதீவு மீட்பு கோரிக்கை என்பது அரசியல் ரீதியானது எனவும் அதனை மனிதாபிமான உதவிப் பொருட்களை வழங்கும் விடயத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுடன் கலக்காது மனிதாபிமான உதவிகளை வழங்குவதை விடுத்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது உதவி வழங்கும் சூழ்நிலையை தமிழ் நாட்டு அரசும் தமிழ் நாட்டு மக்களும் ஏற்படுத்தும் பட்சத்திலேயே வம்சாவளித் தமிழர்களாக பெருமிதம் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள தருணத்திலும் அந்நிய செலாவணிகளை தோட்டத் தொழிலாளர்கள் ஈட்டித் தருகின்றார்கள் எனவும் அந்த மக்களின் அடிப்படை தேவைகளை கூட அரசாங்கம் பூர்த்தி செய்ய முடியாத அவலநிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளம் குறித்து தற்போது பேசுவது பயனற்றது எனவும் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பளம் வழங்குகினாலும் நட்டமில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here