சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சம்பவமொன்று நல்லத்தண்ணி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லத்தண்ணி தனியார் வாகன தரிப்பிடத்தில் வைத்து, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 36 யாத்திரிகர்களுடன் பஸ் ஒன்றில் வருகைத்தந்த குழுவிலுள்ள ஒருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சமையல் செய்வதற்காக பஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு, தனக்கு தானே அவர் தீ வைத்துக்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் நல்லத்தண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிக்கோயா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



