இந்த சீசன் தொடங்கும்போதே முந்தைய சீசன்களோடு ஒப்பிட்டு இதன் போட்டியாளர்கள் தேர்வையும், கன்டென்ட் டீமையும் தொடர்ந்து சமூக வலைதளங்களை பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
அதிலும் முதல் வாரம் அத்தியாசிய தேவையான தண்ணீரை நிறுத்தி போட்டியாளர்களை சோதித்தது எல்லாம் பார்ப்பவர்களுக்கே அசூயையை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். குறிப்பாக, முக்கால்வாசிக்கு மேல் தெரியாத முகங்கள் என்னும்போது சொல்லவே வேண்டாம். இப்படியாக பெரிய அளவில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த சீசனில் திடீர் திருப்பமாக எந்தவித திட்டமிடலுமே இல்லாமல் அமைந்ததுள்ளது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் + கானா வினோத் கூட்டணி.
இந்த வார சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்குள் செல்ல பிக்பாஸ் அணியிலிருந்து கானா வினோத், பார்வதி, திவாகர் மூவரும் தேர்வு செய்யப்பட்டனர். வழக்கமாக பார்வதி – திவாகர் கூட்டணிதான் சீசன் தொடங்கியது முதல் பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களிடமிருந்து விலகி இருந்தது. அல்லது இவர்களை விட்டு மற்றவர்கள் விலகி இருந்தனர். இந்தச் சூழலில் ஒரு டாம் & ஜெர்ரி போல, கவுண்டமணி – செந்தில் போல, மெய்யழகன் அரவிந்த்சாமி – கார்த்தி கூட்டணி போல எதிர்பாராத விதமாக அமைந்தது திவாகர் – வினோத் கூட்டணி.
திவாகரை சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உக்கார வைத்து வினோத் கைரேகை ஜோசியம் பார்க்கத் தொடங்கியதிலிருந்து இந்த கூட்டணியில் ரகளைகள் ஆரம்பாகின. இதன் பிறகு லான் ஏரியாவில் அவர்கள் இருவரும் உட்கார்ந்து பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவர்கள் இருவரும் பேசுவது என்னவோ சீரியஸாகத்தான். ஆனால், பார்ப்பவர்களுக்கு அது குபீர் சிரிப்பை வரவழைத்து விடுகிறது.
அதிலும் திவாகர் தன் பெயரை அவரையே அறியாமல் மற்றவர்களை அழைக்கும்போது வினோத் காட்டும் எதிர்வினைகள் எல்லாம் இன்னும் பல சீசன்கள் கடந்தாலும் நின்று பேசும். பிக்பாஸ் இந்த சீசனை பார்க்காதவர்கள் கூட சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகளை பகிர்ந்து ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னொரு பக்கம் இந்த வாரத்தின் மற்றொரு முக்கிய பேசுபொருளான விஷயம் துஷாரின் தலைவர் பதவி பறிப்பு. எந்த சீசனிலும் இல்லாத வகையில் கேப்டனுக்கு என்று தனி வீடு என சொகுசு செய்து வைத்திருக்கிறார் பிக்பாஸ். ஆனால் சீசனின் முதல் தலைவரே மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல எதுவும் செய்யாமல் இருந்தது அவரே கடுப்பாக்கி விட்டிருக்கிறது.
ஆரோரோவுடன் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே முழு வேலையாக செய்து கொண்டிருந்த துஷாரிடம் இருந்து தலைவர் பதவியை பிடுங்கி கடுமை காட்டினார் பிக்பாஸ்.
ஒவ்வொரு சீசனிலும் ஏதோ ஒரு லவ் கன்டென்ட் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பக்கம் இருக்கும், போட்டியாளர்கள் தங்கள் டாஸ்க்குகளை சரிவர இன்னொரு பக்கம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த சீசனில் மற்ற போட்டியாளர்கள் செய்யும் விஷயங்களை லவ் கன்ட்டென்ட்டுகள் ஓவர் டேக் செய்துவிடுகின்றன. அது காதலா, நட்பா, கிரஷ்ஷா என பார்வையாளர்களுக்கு மட்டுமில்லை, சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியவில்லை.
இந்த லவ் கன்டென்ட் குரூப் பாரபட்சமே இல்லாமல் விதிமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மைக்கை பொத்திக் கொண்டு ரகசியம் பேசுவது, சில நேரங்களை மைக்கையே மாட்டாமல் பேசுவது போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததே துஷாரின் பதவி பறிபோனதற்கு முக்கிய காரணம். அனைவரையும் நடுவீட்டில் உட்கார வைத்து ‘ஒழுக்கமே இல்லாத சீசன் இதுதான்’ என்று பிக்பாஸே சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.
முதல் வாரத்திலேயே போட்டியாளர்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக கடுமை காட்டிய விஜய் சேதுபதி இந்த வாரம் நடந்த விதிமீறல்களை எப்படி கையாளப் போகிறார் என்று பார்க்கலாம்.
HinduTmail




