மிருணாள் தாகூர் மற்றும் துல்கர் சல்மானின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு வதந்திகளை எழுப்பியது. முன்னதாக இருவரும் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சீதா ராமம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? என்று அதிகமாக பேசப்பட்டது.
சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த மிருணாள் தாகூர், ஒரு புதிய தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றி வருவதாக கூறியிருந்தார். இதனால், அந்த படம் ‘சீதா ராமம் 2’ ஆக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய படமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
இந்நிலையில், அது சீதா ராமம் 2 இல்லை, இருவரும் நடித்துள்ள ஆல்பம் பாடலில் உள்ள புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. அப்பாடலின் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ’பீகி பீகி’ (Bheegi Bheegi) என்ற அப்பாடல் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது.
மிருணாள் தாகூர் கடைசியாக தெலுங்கில் நடித்த படம் ‘தி பேமிலி ஸ்டார்’. துரதிர்ஷ்டவசமாக, அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் நடிகர் அதிவி சேஷுடன் இணைந்து நடித்துள்ள ‘டகோயிட்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
மற்றொரு புறம், நடிகர் துல்கர் சல்மான் கடந்த ஆண்டு ‘காந்தா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஆகாசம்லோ ஓக தாரா’ மற்றும் ‘ஐ அம் கேம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.




