சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.

0
179

நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டனர்.

ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.

இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது.

முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் வழமையாக பள்ளிவாசல்களில் காலைவேளையில் விசேட தொழுகைகள் நடைபெறும். மலையக நகரங்களிலுள்ள பள்ளிசவால்களில் முஸ்லிம் மக்கள் அணிதிரள்வார்கள்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக பயணத்தடை இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடினர்.

அட்டன், பொகவந்தலாவ, நுவரெலியா உட்பட மலையகத்தின் பல நகரங்களிலும் இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தது.

க.கிஷாந்தன், கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here