சந்திரிக்கா அரசாங்க காலத்தில் செம்மணி படுகொலைகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும், அதன் பங்காளி கட்சியாக இருந்தது ஜே.வி.பி யினர். அந்த வகையில் , தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்மம் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு முன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
1996 ஆம் ஆண்டு சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது தமிழ் மக்களுக்கு எதிராக செம்மணி படுகொலை உட்பட பல்வேறு படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
அதனை விட பயங்கரவாதத்தை சட்டம் மற்றும் அவசர காலச் சட்டங்களில் அப்பாவி தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதையும் நன்கு அறிவோம்.
அப்போது சந்திரிகா அரசாங்கத்தை பாதுகாத்த அப்போதைய ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் இனவாதம் மதவாதம் இல்லாத ஆட்சியை ஏற்படுத்துவேன் என கோஷமிட்டார். பின்னர் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வருகிறார்கள்.
வலி.வடக்கில் தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக் காணியை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான முதலாவது கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்தார்.
ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் எந்த ஒரு விடயங்களையும் செய்யாது பௌத்த சிங்கள பேரினவாதத்துடனான போக்கினை கடைப்பிடிப்பவராக செயல்படுகிறார்.
மயிலிட்டித் துறைமுக நிகழ்வில் திஸ விகாராதிபதியை அழைத்தால் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என நினைத்து அழைக்காததால் எந்த ஒரு மதத் தலைவரையும் நிகழ்வுக்கு அழைக்கவில்லை.
இதிலிருந்து என்ன விளங்குகிறது பௌத்த சிங்கள பேரினவாதம் தான் எமது கொள்கை என்பதை மதத் தலைவர்களை புறக்கணித்ததன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆகவே தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு விஜயமாக ஜனாதிபதி அனுரா யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் இனியும் ஏமாறக்கூடாது என மேலும் தெரிவித்தார்.