தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாயாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். இது தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். அதற்காக ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை வரலாறு, பெரும் போராட்டத்துக்குரியது.1939 ஆம் ஆண்டு முல்லோயாத் தோட்டத்திலே தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது.
அப்போது பதினாறு சதமாக இருந்த தோட்டத்த தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் 10 வீதத்தால் உயர்த்தி தருமாறு கேட்டபோது அன்றைய ஆட்சியாளர்களினால் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதனால் இந்த வரலாறு என்பது மிகவும் போராட்டமிக்க வரலாறாகும். தற்போது இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சியே அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது . இது ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றார்.




