ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹட்டன் மேற்கு கிராமசேவகர் பிரிவில் காளான் உற்பத்தி கிராமம் ஒன்று உருவாகியுள்ளதாக விவசாய பரிசோதனை உதவி உற்பத்தியாளர் ஜே.ரபாய்டீன் தெரிவித்தார்.
சுமார் 280 மேற்பட்ட குடும்பங்கள் வாழும் குறித்த கிராமத்தில் பெண் அமைப்பு விடுத்து வேண்டுகோளுக்கமைய அரசாங்கத்தினால் சுமார் 6 லட்சம் பெறுமதியான காளான் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் குறித்த கிராமத்தில் தற்போது 20 குடும்பங்கள் காளான் உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் மேலும் பலர் இணைந்து குறித்த முழு கிராமமும் காளான் உற்பத்தி கிராமாக மாறவிருப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இது குறித்து பயனாளிகள் கருத்து தெரிவிக்கையில் ஹட்டன் குடாகம மேற்கு கிராம சேவகர் பிரிவில் சுமார் 280 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.இதில் அதிகமானவர்கள் பெண்கள் பலர் வேலையின்றியே உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும்,வேலையில்லாப்பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் எமது பிரதேசத்தில் உள்ள பெண்கள் அமைப்பு சுய தொழிலில் ஈடுபடுவதற்கு உபகரணங்களை பெற்றுத்தருமாறு நாங்கள் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய தற்போது ஆறு லட்சத்திற்கும் அதிகமான காளான் உற்பத்தி உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்த கிராமத்தில் வாழும் பல பெண்கள் காளான் உற்பத்தியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த குடும்;பங்களில் பொருளாதார சுமையும் குறைவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றன.
தற்போது இருபது குடும்பங்கள் காளான் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் எமது பிரதேசத்தில் உள்ள பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும் இதன் மூலம் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை பெருக்கிக்கொள்ள கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் இதனை பெற்றுத்தந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் இதன் போது தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்