ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 242 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 72 மணி நேரம் கடந்துள்ள நிலையில், அந்த நாட்டு படையினரால் மீட்பு பணிகளி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண், தற்போது இடிபாடுகளில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.புத்தாண்டு தினத்தில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 34 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது, நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.