மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் இன்று (18.07.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள்வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இதன்போது குரல் எழுப்பட்டது.
(க.கிஷாந்தன்)