டிஜிட்டல் அடையாள அட்டை வேலைத்திட்டம் இந்தியாவுக்கு!

0
6

டிஜிட்டல் அடையாள அட்டைக்கான வேலைத்திட்டங்களை முழுமையாக நிறைவுசெய்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வர்த்தமானியை வெளியிட தேசிய ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதனை புறக்கணித்துவிட்டு இந்த வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க இந்த அரசாங்கம் புதிதாக விலைமனுகோரலை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டினார்.

இந்த விலைமனு கோரல் ஆவணத்தின் படி, இந்திய நிறுவனமொன்றினால் மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென்பது நிபந்தனை என்றும் அதனூடாக இலங்கையின் தரவுகளை முழுமையாக இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘‘இலங்கையில் ஆட்பதிவுத் திணைக்களமும் இந்தியாவிலுள்ள நிறுவனமும் இணைந்து ஏதாவதொரு முறையினூடாக இலங்கைக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை. ஏதோவொரு விடயத்தில் அந்த வேலைத்திட்டம் தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டளவில் ஆட்சியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்காக 03 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது. கைவிரல் அடையாளத்தைப் பெறும் இயந்திரம், வெப் கெமரா, நபரை அடையாளம் காண்பதற்கான இயந்திரம், தரவு சரிபார்க்கும் இயந்திரம் என்பவற்றை கொள்வனவு செய்தார்கள்.

ஆட்பதிவுத் திணைக்களம் 05 பில்லியன் ரூபா வரையிலான நிதியை செலவு செய்து இந்த முறையில் 99 சதவீதத்தை பூரணப்படுத்தி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இதனை நடைமுறையில் செயற்படுத்த திட்டமிட்டிருந்தார்கள். அவ்வாறிருக்கையில், இந்தியாவின் ஆதிக்கத்துக்கு எதிராக குரல்கொடுத்த மக்கள் விடுதலை முன்னணியை முன்னோடியாகக் கொண்டு உருவான இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஹான்ஸ் என்றழைக்கப்படும் வர்த்தகர் மற்றும் டிஜிட்டல் தொடர்பான அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவரது பிரதி அமைச்சரும் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்கள். அதாவது, உங்களால் உருவாக்கப்பட்டுள்ள முறை நடைமுறைக்கு சரிவராது, அதனால் இதனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அச்சுறுத்தல் விடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தியாவில் திறனான அரசுக்கான தேசிய நிறுவனம் என்றவொரு நிறுவனக் கட்டமைப்பு இருக்கிறது. எனவே, அந்த நிறுவனத்தினூடாக இந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்பதே இந்த ஹான்ஸ் என்பவரும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பிரதி அமைச்சரும் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள்.

இருந்தபோதும் அதற்கு ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள், இந்த வேலைத்திட்டத்தில் பெரும் படிமுறைகளை கடந்துவிட்டோம், 99 சதவீத வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்துக்காக வர்த்தமானியை ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்றும் இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தொடர்ந்து கூறிவந்துள்ளார்கள். இருந்தபோதும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் நிலைப்பாட்டை சிறிதும் பொருட்படுத்தாமல் இந்த அரசாங்கத்தினர் இணைந்து இந்தியாவிடமிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு இந்த வேலைத்திட்டத்தை ஒப்படைக்க தனித் தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

அதாவது எமது தரவுகளை முழுமையாக இந்தியாவைச் சேர்ந்த விசேட நிபுணத்துவம் கொண்ட நிறுவனமொன்றுக்கு ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளார்கள். இந்தியாவுக்கு முன்பிருந்தே எமது நாட்டில் அடையாள அட்டை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதற்காக விலைமனுகோரல் இலங்கையிடம் இல்லை. விலைமனுவில் இந்தியாவின் நிறுவனங்களினால் மாத்திரமே கோரல் முன்வைக்க முடியுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இலங்கையின் தரவுகளை முழுமையாக இந்தியாவிடம் ஒப்படைக்க விலைமனு கோரலினூடாகவே திட்டமிட்டுவிட்டார்கள்.

அப்படியென்றால் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் விலைமனு கோரலுக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்திய நிறுவனங்களினால் மாத்திரமே விலைமனு கோரலுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனூடாக இலங்கையிலுள்ள ஒவ்வொரு நபர்களினதும் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவின் தரவு கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ளப்படும். அதேபோன்று எலன் மஸ்க் இலங்கையின் பரப்பில் செய்மதியை பொருத்துவது இலங்கை மீதான அக்கறையினால் அல்ல. இந்த சகல விடயங்களும் சர்வதேச தரவு ஆக்கிரமிப்பிலேயே தங்கியுள்ளன. எனவே, இந்த விலைமனுகோரல் ஆவணத்தில் இந்த தரவுகள் மூன்றாம் தரப்பினருக்குச் சென்றால், தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனம் 10 வீதத்தை மாத்திரமே பொறுப்பேற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டையை தயாரிப்பதற்கான முழு அதிகாரத்தை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கியுள்ளது. அந்த அமைச்சே இந்த விலைமனு கோரலுக்கு வாய்ப்புள்ள இந்திய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கும். அப்படியென்றால் இந்த விலை மனு இந்திய நிறுவனத்துக்கே வழங்கப்படும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here