டொரிங்டன் தோட்டத் தொழிலாளர் போராட்டம் -நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப இணக்கம்!!

0
156

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப்போராட்டத்திற்குத் தற்காலிக தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் 07.04.2018 அன்று முதல் பணிக்குச் செல்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

டொரிங்கடன் தோட்டத்தொழிலாளர்கள் சிலருக்குத் தோட்ட நிருவாகத்தினால் பணி இடைநிறுத்தம் மேற்கொண்டமை, தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களிடத்தில் முன்னெடுக்கும் நிர்வாக கெடுபிடிகள் போன்றனவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஒருவாரகாலமாக பணி நிறுத்தம் மேற்கொண்டு வந்தனர். இதன் போது தொழிலாளி ஒருவர் தற்கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட முயற்சித்தப் போது சக தொழிலாளர்களால் அவர் பாதுகாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தலைவர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் அட்டன் தொழிற்திணைக்களத்தில் 4 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுற்றது.

இதன் பின்பு டொரிங்டன் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரை இடமாற்றக்கோரி 5 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இவ்வாறானதொரு நிலையில் டொரிங்டன் தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கிடையில் 06.04.2018 அன்று தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவன கேட்போர் கூட்டத்தில் பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

Photo (5) Photo (6)

இந்தப்பேச்சுவார்தையில் தொழிலாளர் தேசிய சங்கம் சார்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா, சோ.ஸ்ரீதரன், இந்தச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ஆகியோரும் அக்கரப்பத்தனை பெருந்தோட்டக்கம்பனியின் பிரதி பொதுமுகாமையாளர் ரஜீவபண்டார, டொரிங்டன் தோட்ட முகாமையாளர் சின்னா, உதவி தோட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது டொரிங்டன் தோட்ட அதிகாரி தொடர்பில் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து அக்கரப்பத்தனை பெருந்தோட்டக்கம்பனியின் உயரதிகாரிகள் பங்குபற்றும் வகையில் பேச்சுவார்தை ஒன்றை மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இம்மாதம் இறுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்தப்பேச்சுவார்த்தையின் போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்குவதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது.

அத்துடன் தொழிலாளர்களின் கோரிக்கைக்கேற்ப தோட்டத்துக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் கேட்டை அகற்றுவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here