பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு சமூக வலைதளப் பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ‘X’ தளத்தில், மன்னர் சார்லஸ் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்குக் கீழே “TWO KINGS” (இரு மன்னர்கள்) எனக் குறிப்பிட்டு கிரீடக் குறியீட்டைப் பதிவிட்டுள்ளனர்.
நிர்வாக அதிகாரம் எப்போதும் “கட்டுப்பாடுகளுக்கும் சமநிலைகளுக்கும் (Checks and Balances) உட்பட்டதாக இருக்க வேண்டும்” என மன்னர் சார்லஸ் தனது உரையில் வலியுறுத்தினார்.
அதனையடுத்தே, ட்ரம்ப்பை மன்னராகச் சித்தரிக்கும் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
மன்னரின் வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அருகே பிரித்தானியக் கொடிகளுக்குப் பதிலாகத் தவறுதலாக ஆஸ்திரேலியக் கொடிகள் வைக்கப்பட்டிருந்தது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
சுமார் 15 ஆஸ்திரேலியக் கொடிகள் பின்னர் அகற்றப்பட்டு பிரித்தானியக் கொடிகள் மாற்றப்பட்டன.
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த 4 நாள் பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் மற்றும் லண்டன் இடையே அரசியல் ரீதியான சில பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இந்தப் பயணம் மற்றும் வெள்ளை மாளிகையின் இந்தப் பதிவு உலக அளவில் உற்றுநோக்கப்படுகிறது.




