தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஜீவன் தலைமையில் ஆரம்பம்

0
192

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் தொடக்கத்தின் பின் நடந்தேறிய பொருளாதார நெருக்கடி நிலை, மற்றும் அரசியல் நெருக்கடியினால் தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் தற்போது தொடரவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய தலவாக்கலை ஓலிரூட் உள்ளிட்ட நாகசேனை மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு இ.தொ.கா குழுவினருடன் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் 31.03.2023 இன்று கள விஜயத்தில் ஈடுப்பட்டார்.

இதன்போது தலவாக்கலை, நாகசேனை, மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச தோட்டப்பகுதிகளில் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்டு முழுமைப்பெறாத தனிவீடு கட்டடங்களை பார்வையிட்டார்.

அத்துடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இப்போது அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின் தோட்டங்களில் கட்டியமைக்கப்பட்டு முழுமைபெறாது காணப்படும் தனி வீடுகளை அபிவிருத்தி ஊடாக முழுமைப்படுத்தி வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென மலையகத்தில் எங்கெல்லாம் தனிவீடுகள் அமைக்கப்பட்டு முழுமைப்படுத்தாமல் இருக்கின்றதோ அங்கெல்லாம் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகள் ஆராயப்பட்டு அதற்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த கள விஜயத்தின் போது காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான ஏ.பி.சக்திவேல் உள்ளிட்ட உப தலைவர் எம்.சச்சிதானந்தன், அக்கரப்பத்தனை பிரதேச சபை முன்னாள் தலைவர் இராமன் கோபால் உடன் பலரும் கலந்து கொண்டனர்.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here