16 வயது சிறுமியான மகள் றைஸ் குக்கரில் சோறு சமைத்துக் கொண்டிருந்தவேளை அவ்விடத்திற்கு வந்த தந்தை றைஸ் குக்கரின் மூடியை எடுத்து சிறுமியின் முக்கத்தில் வைத்து எரித்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளான சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிங்வத்த வடுபாசல்வத்த பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று(05) இரவு 7.45 மணியளவில் சிறுமி சோறு சமைத்துக் கொண்டிருக்கும் போது சிறுமியின் தாய் அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். அவ் வேளையில் சந்தேக நபரான சிறுமியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது றைஸ் குக்கரை திறந்து பார்த்த சந்தேக நபரான தந்தை, இவ்வளவு அரிசி எதற்காக சமைக்கின்றாய் எனக் கேட்டு ஆத்திரமடைந்து, றைஸ் குக்கர் மூடியை எடுத்து சிறுமியின் முகத்தில் வைத்து அழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தாயும் சிறுமியும் தந்தைக்கு எதிராக முறைப்பாடு அளிக்க காவல்துறைக்கு சென்றுள்ளனர். இதன்போது சிறுமியின் முகத்தில் எரிகாயங்கள் காணப்படவே அவர் உடனடியாக பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபரான தந்தையை கைது செய்ய காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை காவல்துறை பரிசோதகர் பத்மா நந்தன தெரிவித்தார்.