தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டன் போடைஸ் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்.

0
200

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டன் போடைஸ் தோட்ட மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரி இன்று (12.05.2021) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் – டயகம பிரதான வீதியில் அமைந்துள்ள தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

அந்த தோட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து என்பீல்ட் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டத்திற்கு பயண தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இன்று (12.05.2021) காலை பயணத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து போடைஸ் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எனவே கடந்த பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாம் தோட்ட தொழிலையும் இழந்து வருமானமில்லாது அவதிப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மேற்படி பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துபேசி தீர்வை பெற்று தருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஒன்று கூட முடியாது எனவும் பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இதேவேளை இன்ஜஸ்ரி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஹொன்சி நகரம் புளியாவத்த, பேன்போட் ஆகிய தோட்ட பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளளன.

எனினும் இன்ஜஸ்ரி, பிலிங்போனி ஆகிய தோட்டங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here