உரிய முன்னறிவித்தல் இன்றி தனியார் வங்கிகள் திடீரென மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் தனியார் வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வந்தன.
இவ்வாறானதொரு நிலையில் தனியார் வங்கிகள் இன்று முதல் சில நாட்களுக்கு மூடப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டதால் இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
வங்கிகளில் காசோலை மூலமான பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் வர்த்தக நிலையங்கள் , தொழில் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள், அவசர கொடுப்பனவுகள் போன்றவற்றை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை தோட்ட நிர்வாகங்களினால் வழங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கி தலையீடு செய்து தனியார் வங்கிகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.