தனியார்துறையினருக்கு வழங்கப்படும் சலுகை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் திகாம்பரம் எம்.பி. வேண்டுகோள் !

0
156

கொரோனா தொற்றுக்கு ஆளாகி அல்லது தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளமை வரவேற்கத் தக்க விடயமாகும். அத்தகைய நிவாரணத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவிய ஆரம்ப காலப் பகுதியில் மாதக் கணக்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முடங்கிக் கிடந்த நேரத்திலும் கூட பெருந்தோட்டத் துறை ஸ்தம்பிதமடையவில்லை. தொழிலாளர்கள் கொரோனாவையும் பொருட்படுத்தாது வேலைக்குச் சென்று தேயிலைத் தொழிற் துறையைக் காப்பாற்றி வந்துள்ளார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் 5000 ரூபா நிவாரணம் வழங்கிய நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கின்றது என்பதைக் காரணம் காட்டி பலருக்கு நிவாரண உதவி மறுக்கப்பட்டிருந்தது. எனினும், தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைக்குச் சென்று வந்தார்கள். அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், கிராம மக்களுக்கும் நிவாரண உதவிகள் தடையின்றி கிடைத்து வந்தன.

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு நாட்டில் கொரோனா தொற்று பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது. அண்மைக் காலமாக தொற்றாளர்கள் மற்றும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மாவட்டங்களிலும் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான தோட்டங்கள் முடக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், அரச மற்றும் தனியார் துறையினரின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தனியார் துறைகளில் உள்ள 35 இலட்சம் ஊழியர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக விடுமுறையில் உள்ளவர்களுக்கும், கடமைக்கு வருகை தர முடியாதவர்களுக்கும், தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கும், நிறுவனங்கள் இயங்க முடியாத நிலையில் இருந்தாலும் கூட அவர்களின் முழுச் சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய நிவாரணத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலவாக்கொல்லை, அட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா பகுதிகளில் பல தோட்டங்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் துறை ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்குவது போல, தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் முழுச் சம்பளம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தொழில அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here