இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் (07) நாளையும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்து இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.கடந்த புதன்கிழமை கடல் எல்லையை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணாகவே, மீனவர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
தொடர் கைது நடவடிக்கைகளால் மீனவ சமூகம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத அவலநிலையில் உள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கடந்த காலங்களில் அதிகாரிகளிடம் கோரியபோது, இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் உருவாகியுள்ளதால், பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.மேலும், இந்திய அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.