தமிழ் பெண்களையோ அல்லது தமிழர்களையோ இழிவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி பேசவும் இனவாத சிந்தனையில் அடக்கு முறையைப் பிரயோகிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது.
யாழ். ரயிலில் பயணித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கெட்ட வார்த்தைகள் பேசிய ரயில் அதிகாரியை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இ.தொ.கா உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் சார்பில் அந்த அதிகாரியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ் ரயிலில் பயணித்த தமிழ் பெண் ஒருவர் மீது ரயில் அதிகாரி ஒருவர் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
யாழ் ரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது ரயில் அதிகாரி ஒருவர் இனவாத ரீதியாகவும், தவறான முறையிலும் நடக்க முற்பட்டு கெட்ட வார்த்தைகளால் அப்பெண்ணை திட்டித் தீர்த்துள்ளார்.
இவ்வாறு தமிழர்கள் மீது இழிவான முறையில் நடந்து கொள்ளவும், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது.தமிழ் மக்கள் வேறு எந்த இனத்தவர்க்கும் தரம் தாழ்ந்தவர்களில்லை.
இந்த ரயில் அதிகாரி மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த அதிகாரியின் செயற்பாடானது ஒவ்வொரு தமிழரினதும் தன்மானத்தை உரசிப் பார்ப்பதாக உள்ளது.
இத்தகைய இனவாதம் கொண்ட அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தி பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தகுந்த ஆதாரங்களுடன் அவரைப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் அழுத்தமாக கேட்டுக் கொள்கின்றது.
அரசாங்கம் இதிலிருந்து தவறும் பட்சத்தில் மலையக ரயில் சேவைகளை ஸ்தம்பிக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
குறித்த அதிகாரி நடந்து கொண்ட விதம் தொடர்பிலான ஆதாரங்கள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.