இன்று மலையக மக்களை பிரதிநித்துவம் செய்கின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் கட்சிகளுடன் இணைந்து 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கூட்டாக வலியுறுத்தும் ஆவணமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர் அதைவிட ஐந்தம்ச விடயங்கள் தொடர்பிலும் திட்ட வரைபு ஒன்றும் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 13வது திருத்தம் என்பது மலையக மக்களுக்கான எந்தவொரு நன்மையையும் பயக்காத ஒன்றாகும் இந்த திருத்தச்சட்டம் வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஜேஆர் ஜயவர்தன இந்த சட்டத்தை நாடாளுமன்றில் சட்டமூலமாக்கும்போது 87இல் அதிக பெரும்பான்மை கொண்ட ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனைப்பேர்களிடமும் ஏற்கனவே ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்திருந்ததால் அதை அமுல்படுத்த முடிந்தது எனினும் அப்போது உணவுத்துறை அமைச்சராக இருந்த காமினி ஜெயசூரியா தனது பதவியை ராஜினாமா செய்தார் அதைவிட இனவாதி சிறில் மத்யூ எதிர்த்து வாக்களித்தார். அதுமட்டுமல்ல ஜேவிபி முற்றுமுழுதாக எதிர்ப்பை வெளியிட்டது அந்த சட்டத்தை ஆதரித்தவர்களை கொன்றொழித்தது இடதுசாரிகள் கட்சிகளை சேர்ந்த சுமார் ஆறாயிரம் பேர்வரை படுகொலை செய்யப்பட்டனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சுந்திரக்கட்சி பகிரங்க எதிர்ப்பை வெளியிட்டது அதைவிட இந்த சட்டமூலத்தை புலிகள் ஏற்க்கப்போவதில்லை பகிரங்கமாக அறிவித்தார்கள் .வரதராஜ பெருமாள் தலைமையில் ஈபி ஆர் எல் எப் அமைத்த மாகாணசபையை இயங்கவிடாமால் அந்த மைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை அழித்தொழித்தார்கள். இந்த சட்டமூலத்தின்படி பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படவேயில்லை எனவே சந்திரிகாவின் ஆட்சியில் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு சில அதிகாரங்களை வழங்க கொண்டுவரப்பட்ட தேர்வுப்பொதியை நாடாளுமன்றில் ரணில் தலைமையிலான ஐதேக கிழித்து தீயிட்டது. இறுதியாக வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபோது நீதியரசர் சரத் என் சில்வா 13வது திருத்தம் இந்த சிறிய நாட்டுக்கு தேவையற்ற ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இதைவிட அன்றே தினேஷ் குணவர்தன போன்றவர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர் 13யை அமுல்படுத்தவே மாட்டோம் என்று மகிந்த ஒப்புக்கொண்டதன் பின்னரே நாம் ஆதரவை நல்கினோம் என்ற விமல் வீரவன்சவின் அறிவிப்பும் இருக்கின்றது. இப்படி எத்தனையோ எதிர்ப்புக்களை கடந்துவந்த 13யை அமுலுக்கு கொண்டவரவேண்டும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆலோசனைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இணைவதில் இருக்கும் பின்னணி என்ன? அதனால் மலையகத்துக்கு ஏற்படப்போகின்ற நன்மைகள் என்ன? அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளுக்கும் மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்கு மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடுகள் உண்டு எனவே இந்த கூட்டு என்பது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் போடும் முடிச்சியாகவே பார்க்க தோன்றுகிறது.
வரதன் கிருஸ்ணாவின் முகநூலிலிருந்து.