தலவாக்கலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உபசெயலகம் உதயம்.

0
257

லிந்துலை தலவாக்கலை நகரசபைக்கு உட்பட்ட பொதுமக்களின் சேவைகளை இலகுபடுத்துவதற்காக உபசெயலகம் ஒன்றினை இம் மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் பாரதிதாசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது உப செயலகத்தின் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமனன் பாரதிதாசன் தெரிவித்தார்.

குறித்த செயலகம் தலவாக்கலை தியசிறிபுர பகுதியில் வி.டி.தர்மலிங்கம் கட்டடத்திற்கருகாமையில் உள்ள தலவாக்கலை நகரசபைக்கு சொந்தமாக கட்டடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக உதவி பிரதேச செயலாளர் வருகை தந்து பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

தலவாக்கலை லிந்துலை நகரசபை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சுமார் 25 கிலோமீற்றர் கடந்து நுவரெலியாவிற்கு சென்றே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டிய நிலை காணப்பட்டது.இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

மக்கள் தொகைக்கேற்ப பிரதேச செயலகங்களை நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் வலுவாக வலுப்பெற்று இருந்தது. இந்நிலையில் நீண்டகாலமாக தலவாக்கலை நகரில் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு வழிகளிலும் செயற்பட்டவர் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள். அந்தப்பணியினை கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தற்போது இ.தொ.காவுக்கு கிடைத்த ஒருவருட காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்கள் நலன் கருதி முன்னெடுத்துள்ளார்.

இதற்காக இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரசாங்கம் மூலம் பாரிய நிதியினை ஒதுக்கித் தந்துள்ளனர். இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்காக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி தொழிற்சங்க இன மத மொழி பேதமின்றி ஒத்துழைத்து வருகின்றனர் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here