மலையக பகுதிகளில் இருந்து புறப்பட்டு கொழும்பில் தொழில் புரியும் மலையக உறவுகளே! நீங்கள் செய்யும் தொழிலை கேவலப்படுத்தி அண்மையில் இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்த உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.
தொழிலை கேவலப்படுத்தும் ஒரு திட்டத்துடன் நாம் குறிவைக்கப்பட்டோம் என்பதை அறிவீர்கள்? இந்த தொழில்களை இலங்கையில் புரிபவர்கள் நாம் மட்டுமா? இல்லை அனைத்து சமூகங்களை சார்ந்தவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள், மலையகத்தை சார்ந்தவர்கள் மட்டும்தான் கூலிவேலைகளிலும், கடைகளில் சிப்பந்திகளாகவும் பணிபுரிபவர்கள் என்ற தோற்றப்பாட்டை காட்டுவது ஒரு சமூகத்தை நோக்கி இழிவுப்படுத்தும் ஒரு நிலைப்பாடாகும்.
நாம் இந்த தொழில்களை தேர்ந்தெடுத்து பணி புரிவது எமது பொருளாதார பின்னணியே காரணம், எது எப்படியாயினும், சட்டவிரோத செயல்களில் இறங்கி நாம் செயலாற்றவில்லை எமது உழைப்பின் மூலமே எமது கஷட நிலையை போக்கி கொள்கிறோம், அந்தவகையில் நாம் பெருமைக்கு உரியவர்களே.
இதில் நாம் செய்யும் தவறு என்ன? கொழும்பில் தொழில் புரியும் மலையகத்தவர் என்ற கணிப்பு சுமார் ஒரு லட்சம் என சொல்லப்படுகிறது ஆனால் அங்கு நாம் தனித்தனியாக உதிரிகளாகவே வாழும் நிலை, தொழிரீதியாக ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு அங்கு எமக்கென்ற ஒரு அமைப்பு இல்லை, முதலாளிகளால் ஏற்படும் தொல்லைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை, அநேகர் தமது இறுதி காலங்களில் எந்த கொடுப்பனவுக்கும் உரித்து அற்றவர்களாக வாழும் நிலை, தொழிலாளர் சேமலாப நிதி, தொழிலாளர் நம்பிக்கை நிதி என்பன கிடைப்பதில்லை எனவே இதற்காக தொழில் சார்ந்த ஒரு அமைப்பை ஏன் நாம் கட்டமைக்க கூடாது?
இது தொடர்பில் நாம் பல இளைஞர்களுடன் கலந்து உரையாடி வருகிறோம் இதற்கு பாகுபாடு அன்றி ஆதரவு நல்குவீர்கள் என நம்புகிறோம், உதிரிகளாக வாழ்ந்து எமது உழைப்பை மட்டும் முதலாளிகளுக்கு விரயம் செய்ய முடியாது, ஒரு கட்டமைப்பை நாம் கட்டாயம் உருவாக்க வேண்டும், அது ஒரு தொழில் சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டும், மலையக மக்களில் அக்கறையுள்ள புத்தி ஜீவிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது, இதில் எந்த கட்சியும் சம்பந்தப்படாத சுய அமைப்பாக இயங்கும், இதில் உங்கள் ஒத்துழைப்பை மட்டுமே எதிர்ப்பார்த்து இருக்கிறோம், அமைப்பை உருவாக்கம் நடந்தபின் உங்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம், உங்களின் ஆலோசனைகள் எதிர்பார்க்கிறோம், முதுகெலும்பு இல்லாதவர்களாக தலைநகரில் நாம் வாழ்ந்து தொலைக்க முடியாது.
கொழும்பிலிருந்து மலையக இளைஞனின் ஆலோசனை.
கொழும்பு வாழ் மலையக உறவுகளின் நலன் விரும்பி.