மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றுக்கு தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை, பொரகொட வத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண்ணே இச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பெண் மினுவாங்கொடை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள அழகு நிலையமொன்றிற்கு விருந்தொன்றில் பங்குபற்றுவதற்காக தன்னை தயார்ப்படுத்த சென்றுள்ளார்.
இதன்போது தலைமுடியை சீர்செய்வதற்காக 15000 ரூபாய் பணத்தினை அழகு நிலைய உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு தலைமுடியை சீர்செய்ய சில பொருட்களை தடவியுள்ளனர்.சிறிது நேரம் சென்றதும், பெண்ணின் தலையில் திடீரென வீக்கம் ஏற்பட்டு அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அழகு நிலைய ஊழியர்கள் உடனடியாக பெண்ணின் தலையை கழுவி துடைத்துள்ளனர்.இதன் பின்னர் கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.