டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்ட குடியிருப்பொன்றில் சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்கள் தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு நிலைய ஆய்வாளர்களின் அறிக்கைக்கேற்ப பாதிக்கப்பட்ட குடியிருப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.குறிப்பிட்ட தோட்டத்துக்கு விஜயம் செய்த மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் நிலைமைகளை நேரடியாக அவதானித்துள்ளார். இவருடன் தொழிலாளர் தேசிய சங்க்ததின் டிக்கோயா அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்டத்தலைவர் செல்வராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்த விஜயத்தின் பின்பு இவ்விடயம் தொடர்பாக ஸ்ரீதரன் மேலும் தெரிவித்ததாவது:
டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள 5 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் ஐந்து அறைகளின் மேற்பகுதி சுவர்களின் சிறுபகுதி 26 ஆம் திகதி காலை 5 மணிளயவில் இடிந்து விழுந்துள்ளது.
இதன் போது உறங்கி கொண்டிருந்த ஒருவர் மீது கற்கள் விழுந்ததால் அவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டிடத்தின் சுவர்கள் இடிந்த போது நிலஅதிர்வு போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தச்சம்பவம் தொடர்பாக அம்பகமுவ பிரதேச செயலாளர், தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் நுவரெலியா இணைப்பதிகாரி, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் டிக்கோயா இணைப்பாளர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்த போது உரிய ஆய்வறிக்கை கிடைத்த பின்பு குறிப்பிட்ட தோட்டக்குடியிருப்பாளர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
க.கிஷாந்தன்