தினமும் 103 புற்றுநோயாளர்கள்!

0
6

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதனடிப்படையில் பார்த்தால் பொதுவாக வருடமொன்றில் ஒவ்வொரு நாளும் 100 – 103 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் குடும்பநல விசேட வைத்திய நிபுணர் துராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டில் தற்போது மஹரகம தேசிய புற்றுநோய் தடுப்பு நிறுவனம் உள்ளிட்ட 25 புற்றுநோய் தடுப்பு நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. 2021ஆம் ஆண்டு வரையிலான தேசிய புற்றுநோய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் வரையிலான புதிதாக பதிவாகும் புற்று நோயாளர்களின் தரவுகள் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், சாதாரணமாக வருடத்துக்கு நாட்டில் 35,000 – 40,000 வரையிலான நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள். அவ்வாறெனில், 2021ஆம் ஆண்டு 37ஆயிரத்து 753 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை 365ஆல் பிரித்தால் சாதாரணமாக நாளொன்றுக்கு 103 வரையிலான புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் தொகை ஒவ்வொரு வருடத்துடனும் ஒப்பிடும்போது மாற்றம் ஏற்படலாம். இருந்தபோதும் பொதுவாக ஒவ்வொரு வருடமும் நாளொன்றுக்கு 100 – 103 வரையான புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

ஆண்கள் பெரும்பாலும் வாய்ப்புற்றினால் பாதிப்படைகிறார்கள். மேலும், சுவாசப் புற்று, மலக்குடல் புற்று போன்று புற்றுநோய்களால் ஆண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் அதிகம் மார்பகப் புற்றினால் பாதிப்படைகிறார்கள். வருடாந்தம் 5,500 வரையிலான பெண்கள் மார்பகப் புற்றினால் பாதிப்படைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக தைரொய்ட் புற்றுநோய், மூன்றாவதாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று, என்பன அதிகம் பரவலடைகின்றன. மேலும், கர்ப்பப்பை புற்றும் பெண்கள் மத்தியில் அதிகம் பரவலடைந்து வருகிறது.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் பொதுவான புற்றாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று காணப்படுகிறது. அடுத்த வருடங்களில் இந்த புற்றுநோய் ஆண்கள் மத்தியில் பரவலடையும் இரண்டாம் நிலை புற்றாகவும் மாற்றமடையலாம். எனவே, இந்த புற்றுநோயை முன்னரே அடையாளம் காண்பது மிக அவசியமாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here