திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீதிக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுமார் 800 ஏக்கர் அளவான விவசாய நிலத்தை அரசாங்கம், சில இந்திய நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்து முத்துநகர் பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோதே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பங்கேற்று கருத்துரைத்த மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே, குறித்த 350 குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கான நிலம் இல்லாமல் போயுள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரங்களில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்குப் பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அனைவரும் இந்த விடயத்தைக் கவனத்திற் கொள்ளவில்லை என்றும் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டினார்.
அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்திருந்த பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, குறித்த காணி தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார்.
இதில் முதலீடு தொடர்பான பிரச்சினையும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மக்களின் காணிக்காக தங்களது தரப்பு முன்னிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு காவல்துறையினர் முற்பட்ட நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.