மருமகள் ஒருவர் தனது மாமியாரை துடைப்பம் கட்டை உடையும்வரை வரை அடித்து பலத்த காயப்படுத்திய சம்பவம் ஒன்று வெயாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வயங்கொடை எலுவாபிட்டிய பிரதேசத்தில் ஒரே வீட்டில் வசிக்கும் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலால் மாமியாரின் வலது கையின் எலும்புகள் பலமாக உடைந்துள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வீட்டின் சமையலறையில் இருந்த துடைப்பம் கட்டை பல துண்டுகளாக உடைந்துள்ளநிலையில் மீட்கப்பட்டதாகவும் வெயாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்ணின் மகன் ஜப்பானில் பணிபுரிந்து வருவதாகவும், தனது மனைவி இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலால் எலும்பு முறிவுக்குள்ளான தாய் வட்டுப்பிட்டிவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார். தாக்குதல் தொடர்பாக மாமியார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மருமகளை கைது செய்த காவல் நிலைய பொறுப்பதிகாரி அசங்க ரங்கன விசாரணையை மேற்கொண்டார்.
இனிமேல் தகராறுகள் வேண்டாம், நிம்மதியாக வாழ்வோம் என இருவரும் உறுதியளித்ததையடுத்து, மருமகளை மாமியாரிடம் மன்னிப்பு கேட்குமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார். இருவரின் நல்லிணக்கத்தையடுத்து சம்பவம் எதிர்காலத்தில் இணக்கசபைக்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.