தென்கிழக்கு ஆசிய பிராந்திய இரண்டாவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்பு!

0
21

பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இது “பாராளுமன்றங்களின் எதிர்காலம் : நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைப் பாராளுமன்றத் தூதுக் குழுவில் வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலகட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அங்கம் வகித்தனர். பெப்ரவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாகிஸ்தானின் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்கேற்றார். இந்த மாநாடு பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைமைதாங்கும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.

“சமாதானம் மற்றும் ஜனநாய நம்பிக்கை : நல்லிணக்கத்திற்கான இயந்திரமாகப் பாராளுமன்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் தொடர்ந்து ஜனநாயக நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பிய இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நவீன பாராளுமன்றங்கள் மக்களின் குரல்களை செவிமடுக்கும், உரையாடல்களை ஊக்குவிக்கும், வெளிப்படைத் தன்மையின் ஊடாகப் பொறுப்புக் கூறலைப் பலப்படுத்தும், குழுக்களை மேற்பார்வை செய்யும், ஊழலுக்கு எதிரான பொறிமுறை, இளைஞயோரின் பங்களிப்பு போன்றவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அத்துடன், நீடித்த சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான அடித்தளங்களாக நல்லிணக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பாராளுமன்றக் கல்வி : நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றுமொரு அமர்வில் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் பாராளுமன்றங்கள், இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து பிரதி சபாநாயகர் விளக்கமளித்தார். பாடசாலை மட்டம் முதல் பெரியோர் வரையில் நாட்டுப் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் ஆட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புக்கூறல் குறித்து கல்வி வழங்குவது மிகவும் முக்கியம்வாய்ந்தது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“சமாதானம் நிறைந்த மற்றும் ஒற்றுமையான சமூகங்களின் முன்னணியாகப் பாராளுமன்றங்கள் : போலியான செய்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களின் அதிகரிப்பு”,  “உய்வுக்கான சட்டமியற்றல் : காலநிலைகளுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குரல்கள்”, “பாலினம், தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை : ஒன்லைன் வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் கையாளல்” என்ற தலைப்புக்களில் இடம்பெற்ற அமர்வுகளில் பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலக்கட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு, பங்களித்தனர்.

இறுதிநாள் அமர்வில் நன்றியுரையாற்றிய பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், ஆசிய பிராந்தியத்தின் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியம், பொதுநலவாய ஒன்றியத்தின் சிந்து கிளை, பாகிஸ்தான் தேசிய பேரவை போன்றவை வழங்கிய சிறப்பான விருந்தோம்பல் மற்றும் ஏற்பாடுகளுக்கு நன்றி பாராட்டினார். இந்த மாநாடு கலந்துரையாடல்களுக்கும், கற்றல்களுக்கும் மதிப்பு மிக்க மேடையாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாதுகாப்பதில் வலுவான பாராளுமன்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், கராச்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பொதுநலவாய நாடுகளின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம், பாராளுமன்ற பொறுப்புக் கூறல், உள்ளடங்கலான நிர்வாகம், பொறுப்புவாய்ந்த புத்தாக்கம், நீடித்த சமாதானம் ஆகியவற்றிற்கான தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் கராச்சி பிரகடனத்தை அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பொதுமக்கள் நம்பிக்கையின் சரிவு, தவறான மற்றும் வழுவான தகவல்களின் பரவல், சமூக ஒதுக்கல், காலநிலை பாதிப்புக்குட்படும் நிலை மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பும் பாராளுமன்ற இராஜதந்திர முயற்சிகளும் அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை முன்னெடுக்க வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் முன்னோக்குப் பார்வை கொண்ட பாராளுமன்றங்கள் இன்றியமையாதவை என்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாக இம்மாநாடு முடிவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here