இம்முறை தேசிய தீபாவளி நிகழ்வுகள் அட்டன் மாநகரில் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய நிகழ்வில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுப்பதாகவும் பெளத்த சாசன மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தேரிவித்தார்.
தேசிய தீபாவளி தின நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி மண்டபத்தில் அவர் தலைமையில் இடம்பெற்ற போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன, மொழி , மத, பேதமற்ற இலங்கையர்கள் என்ற கருப்பொருளின் கீழ் எமது அரசாங்கம் தேசிய நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையர் தினம் என்ற நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு எமது அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அநேகமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் அத்தினத்தை கொண்டாடுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.
நாம் தேசிய பொசன் தினத்தை நுவரெலியாவில் அனுஷ்டித்தோம். தமிழ் , முஸ்லிம் சமூகத்தினர் இதில் கலந்து கொண்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியதை இங்கு கூற வேண்டும். அதே போன்று தமிழர் பண்டிகையான தீபாவளி தினத்தைதேசிய பண்டிகையாக கொண்டாடுவதற்கு நாம் அட்டன் நகரை தெரிவு செய்தோம்.
ஏனென்றால் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மக்கள் இப்பிரதேசத்தில் உள்ளனர். இலட்சக்கணக்கானோர் ஒன்று கூடும் இடமாக அட்டன் உள்ளது. எனவே இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க அனைவரினதும் ஆதரவை எதிர்ப்பார்க்கின்றோம்.
அன்றைய தினம் நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராச்சி, மாவட்ட செயலாளர், நோர்வூட் பிரதேச செயலாளர் , இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன் அட்டன் –டிக்கோயா நகர சபைத் தலைவர், அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான பரிபாலன சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட தேசிய தின நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளை பொறுப்பேற்றிருக்கும் பாடசாலை அதிபர்கள் ,கல்வி அதிகாரிகள், நகர பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.